138. அருள்மிகு அக்னீஸ்வரர் கோயில்
இறைவன் அக்னீஸ்வரர்
இறைவி கருந்தாள் குழலம்மை
தீர்த்தம் அக்னி
தல விருட்சம் புன்னை மரம்
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
தல இருப்பிடம் திருப்புகலூர், தமிழ்நாடு
வழிகாட்டி நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கண்ணபுரம் வழியாக நன்னிலம் - நாகப்பட்டினம் சாலையில் சுமார் 6 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. நாகப்பட்டினம், நன்னிலம் மற்றும் பேரளத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. நன்னிலம் இரயில் நிலையத்துக்கு மேற்கே 6.5 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Thirupugalur Gopuramஅக்னி எல்லா பொருள்களையும் உண்டதால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்குவதற்கு இந்தத் தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டார். சிவபெருமான் சந்திரசேகரராக காட்சி தந்து அக்னி பகவானின் தோஷத்தைப் போக்கியருளினார். கோயிலைச் சுற்றி அகழி உள்ளது.

மூலவர் 'அக்னீஸ்வரர்' அழகிய லிங்க வடிவில், சற்று உயர்ந்த பாணத்துடன் அருள்புரிகின்றார். பாணாசூரன் என்னும் அசுரனின் தாய், முதுமையால் காசிக்குச் சென்று வழிபட முடியாமையால் இத்தலத்திற்கு வந்து மணலினால் ஆன லிங்கம் அமைத்து வழிபட்டார். மணலால் அமைத்ததால் பாணம் சற்று சாய்ந்து விட்டது. அதனால் இத்தலத்து மூலவருக்கு 'கோணபுரீஸ்வரர்' என்னும் பெயரும் உண்டு. அம்பிகை 'கருந்தாழ் குழலம்மை' என்றும் 'சூளிகாம்பாள்' என்றும் வணங்கப்படுகின்றாள்.

Thirupugalur AmmanThirupugalur Moolavarகோஷ்டத்தில் அகத்தியர், நடராஜர், கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர் சந்நிதியில் வாதாபி, வில்லவன் திருவுருவங்கள் உள்ளன. அப்பர் பெருமான் சன்னதியும், உற்சவ மூர்த்தியும் உண்டு. அகோரலிங்கம், பூதேஸ்வரர், அறுபத்து மூவர் திருவுருவங்கள், வியாசர், ததீசி, பிருங்கி, இந்திரன் ஆகியோர் வழிபட்ட லிங்க மூர்த்திகள் உள்ளன.

பிரகாரத்தின் பின்புறம் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமண்யர் சன்னதி உள்ளது. தொடர்ந்து புலஸ்தியர், ஜாபாலி, விராடன் ஆகியோர் பூசித்த லிங்கங்கள். மகாலட்சுமி, சரஸ்வதி, அன்னபூரணி, பவிஷ்யேஸ்வரர், சூரியன், சந்திரன் சன்னதிகள் உள்ளன. பெரிய நடராஜர் திருமேனி உள்ளது. இங்கு நவக்கிரகங்கள் தங்களது திசை நோக்கி இல்லாமல் 'ட' வடிவில் அமைந்துள்ளன. நளனும், சனீஸ்வரனும் ஒரே சன்னதியில் உள்ளனர்.

ஒருசமயம் இப்பகுதியில் வசித்து அம்மன் பக்தை ஒருவர் கர்ப்பமுற்றிருந்தாள். ஒருநாள் இரவு அப்பெண்ணுக்கு பிரசவ வலி எடுக்க, அச்சமயம் மழை பெய்ததால் வெளியில் சென்றிருந்த அவரது தாயார் ஆற்றின் அக்கரையில் மாட்டிக் கொண்டார். அதனால் அம்பிகையே அப்பெண்ணின் தாயார் வடிவத்தில் வந்து பிரசவம் பார்த்தாள். சூல் - கரு. அதனால் இங்குள்ள சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள திருமருகல், திருப்புகலூர், இராமனதீஸ்வரம் மற்றும் இத்தலத்தில் உள்ள அம்மனுக்கும் 'சூலிகாம்பாள்' என்னும் திருநாமம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாது பிரசவம் பார்த்து இரவு தாமதமாகச் சென்றதால் அம்பாள் உள்ளே செல்லாமல் வெளியிலேயே நின்று விட்டாள். அதனால் இந்த நான்கு கோயிலிலும் அம்மன் சன்னதி வெளியிலேயே உள்ளது. எனவே, அர்த்தஜாம பூஜையின்போது அம்பிகைக்கு சம்பா அரிசி, மிளகு, சீரகம், உப்பு, நெய் கலந்த சாதம் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

இத்தலத்தில் சந்திரசேகரர் சன்னதியும், அக்னி சன்னதியும் எதிரெதிரே உள்ளது சிறப்பு. அக்னி பகவானின் இரண்டு முகம், மூன்று பாதம், நான்கு கொம்புகள், ஏழு கை, ஏழு ஜூவாலையுடன் கூடிய மூலவர் மற்றும் உற்சவ மூர்த்தி வேறெந்தத் தலத்திலும் இல்லை. பாணாசுரன் உற்சவ மூர்த்தியும் உள்ளது.

Thirupugalur Apparதிருநாவுக்கரசர் இத்தலத்திற்கு வந்து உழவாரப் பணி செய்தபோது, இறைவன் அவரைச் சோதிக்க எண்ணி, தரையில் பொன்னும், மணியும் சிதறிக் கிடக்கச் செய்தார். ஆனால் அப்பர் பெருமான் அவற்றை மண்ணோடு அள்ளி குப்பைத் தொட்டியில் போட்டு தமது பற்றற்ற நிலையை வெளிப்படுத்தினார். மேலும் அவர் முக்தி பெற்ற சிறப்பு மிக்க திருத்தலம் இதுவே ஆகும்.

சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தை முன்னிட்டு 10 நாட்கள் 'அப்பர் முக்திப் பெருவிழா' நடைபெறுகிறது. வைகாசி மாதம் பிரம்மோற்சவம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதில் பௌர்ணமி அன்று சந்திரசேகரர், அக்னி பகவானுக்கு காட்சி கொடுத்தல் விழா நடைபெறும்.

திருவாரூரில் தொண்டர்களுக்கு உணவளிக்க பொன் வேண்டி சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது களைப்பின் மிகுதியால் தலைக்கு வைத்து தூங்கிய செங்கற்கள் பொன்னாக மாறிய தலம்.

63 நாயன்மார்களுள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், திருநீலநக்கர், சிறுதொண்டர், முருக நாயனார் என 6 நாயன்மார்கள் வழிபட்ட தலம் என்னும் சிறப்புடையது. பூமிதேவிக்கும், ஸத்யாஷாட முனிவருக்கும் நடன தரிசனம் காட்டியருளிய தலம்.

அக்னீஸ்வரர் சன்னதிக்கு அருகில் 'மனோன்மணி அம்பாள் உடனுறை வர்த்தமானீஸ்வரர்' சன்னதி உள்ளது. இதுவே 'திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்' என்னும் சம்பந்தர் பாடிய மற்றொரு தேவாரத் தலம். பெரிய லிங்க மூர்த்தி. இங்குதான் முருக நாயனார் இறைவனுக்கு மலர் மாலைக் கட்டிக் கொடுக்கும் தொண்டு செய்து முக்தி அடைந்தார். அவரது திருவுருவம் வர்த்தமானீஸ்வரர் சன்னதிக்கு எதிரில் உள்ளது. அருகில் சண்டேஸ்வரர் உள்ளார்.

திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களும், திருநாவுக்கரசர் நான்கு பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 6 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com